பயிற்சி பெற இடமின்றித் தவிக்கும் 40-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் மாணவ-மாணவிகள்: பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி!
கோவையில் விளையாட்டு வீரர்களின் திறமையை வளர்க்கும் முக்கிய மைதானங்களில், வாலிபால் மைதானத்தின் ஒரு பகுதி பாக்ஸிங் பயிற்சிக்கும், கபடி ஸ்டேடியம் உணவு விநியோகம் செய்யும் 'ஃபுட் கோர்ட்' (Food Court) பகுதியாகவும் மாற்றப்பட்டு உள்ளதால், பயிற்சி பெற இடமின்றி விளையாட்டு மாணவர்களும் வீரர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவையில் உள்ள வாலிபால் மைதானத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் இதர அமைப்புகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விளையாட்டுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் என நூற்றுக் கணக்கானோர் தினந்தோறும் வாலிபால் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வாலிபால் பயிற்சி பெற்று வந்த மைதானத்தின் ஒரு பகுதியில் தற்போது பாக்ஸிங் பயிற்சிக்காக (Boxing Training) இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வாலிபால் பயிற்சி பெற வேண்டிய பிரதான இடம் சுருங்கி விட்டதால், மாணவர்கள் எங்கு சென்று பயிற்சி செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஒரு விளையாட்டு மைதானம் என்றால் அதற்கென பிரத்யேகமாக இருக்க வேண்டிய வெளி மற்றும் உட்புறச் சூழல் மாறுபடுவதால், முறையான பயிற்சி மேற்கொள்ள முடியாமல் வீரர்கள் தவிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, அப்பகுதியில் கபடி வீரர்களுக்காக இயங்கி வந்த கபடி ஸ்டேடியம் திடீரென மாற்றப்பட்டு, தற்போது உணவு விநியோகம் செய்யும் இடமாகவும் (Food Court) வணிக வளாகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு உள்ளது. இதனால் கபடி பயிற்சி பெறும் வீரர்களும் தங்களது பயிற்சியைத் தொடர முடியாமல் தவித்து வருகின்றனர்.
பாரம்பரிய விளையாடல்களுக்கும் வீரர்களின் எதிர்காலத்திற்கும் ஒதுக்கப்பட்டு உள்ள விளையாட்டு இடங்களில் வணிகச் செயல்பாடுகளை அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என விளையாட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறிப்பிட்ட நேரத்திற்குப் பயிற்சிக்கு வரும் மாணவ-மாணவிகளால் அங்கு உள்ள இட நெருக்கடியால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.
வீரர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் அமர்ந்து காத்து இருப்பதற்குக் கூடத் தகுந்த இடவசதியின்றி அவதிப்படுகின்றனர்.
மாவட்ட மற்றும் மாநில அளவில் சாதிக்கக் துடிக்கும் இளம் வீரர்களின் திறமைக்குத் தடையாக இது போன்ற மாற்றங்கள் அமைவதால், சம்மந்தப்பட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறையினர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.



0 கருத்துகள்: