செவ்வாய், 15 செப்டம்பர், 2026

 "₹10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஜொலிக்கும் கருவறை" ; கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகருக்குப் பிரம்மாண்ட அலங்காரம்!

"₹10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஜொலிக்கும் கருவறை" ; கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகருக்குப் பிரம்மாண்ட அலங்காரம்!

வெள்ளிக் கவசம், கயிலாய வாத்தியங்கள் முழங்கச் சிறப்பு பூஜை: குவிந்த திரளான பக்தர்கள்!

 விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, கோவில் கருவறை முழுவதும் ₹10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் பிரம்மாண்ட பண அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

​₹10 லட்சத்தில் மிளிரும் கருவறை அலங்காரம்:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முதல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்து உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

​விழாவையொட்டி, மூலவர் விநாயகப் பெருமானுக்குப் பளபளக்கும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கருவறைச் சுவர்கள் மற்றும் மண்டபம் முழுவதும் ₹10, ₹20, ₹50, ₹100, ₹200 மற்றும் ₹500 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு, மொத்தம் ₹10 லட்சம் மதிப்பிலான வண்ணமயமான பண அலங்காரம் (Currency Note Decoration) செய்யப்பட்டு இருந்தது.

கயிலாய வாத்தியங்கள் & அன்னதானம்:

பக்தர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த நிதி அலங்கார தரிசனத்தைக் காண நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

​விழாவின் போது அருள்மிகு வரசித்தி விநாயகருக்குக் கயிலாய வாத்தியங்கள் அதிர முழங்க மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

 தொடர்ந்து, கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் கமிட்டி சார்பில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

​இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்து இருந்தனர்.

 "காட்டு அருவி முதல் மும்பை லால்பாக் வரை!" - கோவை, துடியலூர் சுற்றி உள்ள பகுதிகளில் 300+ விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

"காட்டு அருவி முதல் மும்பை லால்பாக் வரை!" - கோவை, துடியலூர் சுற்றி உள்ள பகுதிகளில் 300+ விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

₹10 லட்சத்தில் பண அலங்காரம், ஆசீர்வதிக்கும் யானை, டிரம்ஸ் இசை: நாளை மறுநாள் வெள்ளக்கிணற்றில் விசர்ஜனம்!

​ விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பல்வேறு வினோத வடிவங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, உற்சாகமாக வழிபாடு நடைபெற்று வருகிறது.

​துடியலூர் சுற்றி உள்ள பகுதிகளில் 300+ சிலைகள்:

கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ.பி.எம் நகர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கம்பீரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

​பல்வேறு வடிவங்களில் பிரம்மாண்ட செட்டுகள்:

ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களையும் குழந்தைகளையும் கவரும் வகையில் விதவிதமான தீம்களில் செட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

​துடியலூர்: 

அடர்ந்த வனப்பகுதியில் பாயும் இயற்கை அருவியின் நடுவே விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற கமர்ஷியல் செட் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

​ஐடிஐ பகுதி: 

எல்.இ.டி திரையில் தொடர்ச்சியாக மலர்மழை பொழிய, மும்பையின் புகழ்பெற்ற 'லால்பாக்சா விநாயகர்' மாதிரியில் சிலை வைக்கப்பட்டு 3 வேளையும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

​நரசிம்மநாயக்கன்பாளையம்: 

பிரம்மாண்ட கோவில் வடிவில் செட் அமைக்கப்பட்டு, டிரம்ஸ் இசையுடன், வந்திருக்கும் பக்தர்களைத் தத்ரூபமாக ஆசீர்வதிக்கும் இயந்திர யானை உருவம் அமைக்கப்பட்டு இருந்தது. 

​₹10 லட்சத்தில் பண அலங்காரம்:

 நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

​என்.ஜி.ஜி.ஓ காலனி & அரவான் திடல்:

 என்.ஜி.ஜி.ஓ காலனியில் பிரம்மாண்ட கற்சிலை வடிவில் கணபதியும், அரவான் கோவில் திடலில் அழகிய மயில் வாகனத்தில் அமர்ந்து இருக்கும் பிள்ளையாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர்.

​ரங்கம்மாள் காலனி: 

நீல வண்ணத்தில் அருள்பாலிக்கும் விநாயகருடன், சிறுவர்களைக் கவரும் வகையில் ராட்சச முயல் பொம்மைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 பிரம்மாண்ட விசர்ஜனம்:

அனைத்துப் பந்தல்களிலும் அதிகாலை முதலே கணபதி ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாலை வேளைகளில் மேள ஜமாப், செண்ட மேளம் மற்றும் டிரம்ஸ் இசைகளுடன் ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.

​துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு உள்ள இந்த 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும், நாளை (செப்டம்பர் 17) காவல் துறை பாதுகாப்புடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டையில் முறைப்படி விசர்ஜனம் (கரைக்க) செய்யப்பட உள்ளன.

 "மும்பை லால் பாக்சா வடிவில் 'விநாயகர்'" - கோவையில் ஆயிரக் கணக்கானோருக்கு தரிசனம்!

"மும்பை லால் பாக்சா வடிவில் 'விநாயகர்'" - கோவையில் ஆயிரக் கணக்கானோருக்கு தரிசனம்!

வழியெங்கும் மலர் தோரணம், எல்.இ.டி திரையில் மலர்மழை: 3 நாட்களும் முவேளையும் உணவு வழங்கி அசத்தல்!

 விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை ஐடிஐ (ITI) பகுதியில் இந்து முன்னணி சார்பில் மும்பையின் புகழ்பெற்ற 'லால்பாக்சா ராஜா' வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தொடர் அன்னதானம் வழங்கி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை ஐடிஐ பகுதியில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, அப்பகுதி முழுவதையும் மலர் தோரணங்களால் அலங்கரித்து, மும்பையின் உலகப் புகழ்பெற்ற 'லால்பாக்சா ராஜா' (Lalbaugcha Raja) விநாயகரின் மாதிரி வடிவில் 'ஐடிஐ-க்கா ராஜா' என்ற பெயரில் கம்பீரமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

​விநாயகர் சிலையின் பின்புறம் பிரம்மாண்ட எல்.இ.டி (LED) திரைகள் அமைக்கப்பட்டு, அதில் தொடர்ந்து மலர்கள் தூவுவது போன்ற நவீன ஒளி-ஒலி அமைப்புகள் செய்யப்பட்டு இருந்தது பக்தர்களைப் பெரிதும் கவர்ந்தது.

 கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனையுடன் விழா தொடங்கியது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

​தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் மற்றும் காரப் பணியாரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும் மதிய வேளையில் 1,000-க்கும் மேற்பட்டோருக்குப் பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

 தொடர்ந்து 3 நாட்களும் காலை, மதியம், இரவு என 3 வேளையும் பக்தர்களுக்குத் தடையின்றி அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

மாலை வேளையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் விநாயகர் சிலை எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாகத் திருவீதி உலா நடைபெற்றது. மேலும், விழாவை முன்னிட்டுச் சிறுவர், சிறுமிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

​இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து முன்னணி நிர்வாகிகள் சாச்சு, கிருஷ்ணா, தினேஷ், விகாஷ், சிபி, ஈ.பி. விஸ்வநாதன், வினித், நகுல், கிங்ஸ்லி, தர்னிஷ், கண்ணன், புனித், சுராஜ், கார்த்தி, பிரகாஷ் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் காயத்ரி, மாலதி, ராணி, வசந்தா, அனு, ஜெயமணி, ராஜி, அமுதா, சிவசக்தி, ஸ்ரீவித்யா மற்றும் ஐடிஐ பகுதி ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்து இருந்தனர்.

 "பிரம்மாண்ட செட், மேள ஜமாப், டிரம்ஸ் இசை" ; கோவை, ராக்கிபாளையத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!

"பிரம்மாண்ட செட், மேள ஜமாப், டிரம்ஸ் இசை" ; கோவை, ராக்கிபாளையத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!

300-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை: அன்னதானம் மற்றும் எழுச்சிமிகு ஊர்வலத்துடன் கொண்டாட்டம்!

 விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை ராக்கிபாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் மற்றும் மேள தாள ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான வடிவங்களில் பிரம்மாண்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

​குறிப்பாகக் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ.பி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை ராக்கிபாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் மிக பிரம்மாண்டமான அளவில் கலைநயமிக்க செட் அமைக்கப்பட்டு, அதில் கம்பீரமான மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

​இன்று அதிகாலையிலேயே கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ராக்கிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

மாலை வேளையில் நடைபெற்ற விழாவில், செண்ட மேளம், மாலை ஜமாப் மற்றும் அதிரடி டிரம்ஸ் இசை நிகழ்ச்சிகள் (Drums Performance) உற்சாகமாக நடைபெற்றன. இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடிப்பாடி விழாவைக் கொண்டாடினர்.

​அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்குச் சுவையான அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன் விநாயகர் சிலை ஊர்வலமும் எழுச்சியுடன் நடைபெற்றது.

​இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் 'படையப்பா' (எ) முத்துக்குமார், நிர்வாகிகள் தினேஷ், ஞானசேகர், அருண், நவீன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்து இருந்தனர்.

 "தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய அண்ணாவிற்கு அஞ்சலி" ; துடியலூரில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

"தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய அண்ணாவிற்கு அஞ்சலி" ; துடியலூரில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

தி.மு.க அலுவலகத்தில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை : நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு!

​ தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை துடியலூரில் திமுக சார்பாக அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழர்களின் அடையாளமாகவும், திராவிட இயக்கத்தின் தூணாகவும் விளங்கிய பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15) தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினராலும் பொதுமக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

​1909-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா, சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமைகள் மற்றும் தமிழ்மொழி உயர்வுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். 1967-இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 'மதராஸ் மாநிலம்' என்பதற்குப் பெருமையுடன் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, கோவை துடியலூர் கிழக்கு பகுதி 2-வது வட்டக் கழக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துடியலூரில் உள்ள தி.மு.க கட்சி அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

​மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டக் கழகச் செயலாளர்கள் சண்முகம், சி.டி.சி. ராஜா, தமிழ்நிதி, குமார் (எ) சண்முகம், கழக நிர்வாகிகள் கேப்டன் பிரபாகரன், நிதியரசு, ஆறுச்சாமி, ராமசாமி, சீனிவாசன், சேகரன், வாசு, டி.எஸ். ராமசாமி, டி.என்.சி. பழனிச்சாமி, டி.ஆர். ராஜேந்திரன், ரவி, அயூப்கான், பீடா கடை ராஜன், ஜீவரத்தினம், சிவநந்தினி, தனபாக்கியம், கோமதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டு அண்ணாவின் புகழுக்கு அஞ்சலி செலுத்தினர்.

"சாதி, மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்" ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் 11 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிவசேனா!

"சாதி, மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்" ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் 11 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிவசேனா!

5 நாட்கள் இயல், இசை, நாடகம், பட்டிமன்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

​ நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா பக்திச் சிறப்புடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாதி, மத பேதமின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் மா.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

​இதன் ஒரு பகுதியாக, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சிவசேனா அமைப்பின் சார்பில் சுமார் 11 அடி உயரமுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலை கம்பீரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 சிவசேனா மாநிலச் செயலாளர் மா.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் உள்ளிட்ட அனைத்து வேதகாலப் பூஜைகளும் முறைப்படி நடைபெற்றன.

விழா குறித்து சிவசேனா மாநிலச் செயலாளர் மா.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

​"சிவசேனா அமைப்பின் சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் வைக்கப்பட்டு உள்ள இந்த விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடர்ந்து 5 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழா நாட்களில் இயல், இசை, நாடகம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு கலைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து போட்டிகளில் பங்கேற்பதோடு, விநாயகப் பெருமானின் அருள் பெற்று வாழ்வில் நோயற்ற வாழ்வும் இன்பமும் பெற வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "நம்நாட்டில் மனிதர்கள் இடையே சாதி, மத, இன பேதம் எதுவும் இருக்கக் கூடாது. மக்கள் அனைவரும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதே இந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நோக்கமாகும்," என்று சமூக நல்லிணக்கச் செய்தியைத் தெரிவித்தார்.

​இவ்விழாவில் சிவசேனா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திங்கள், 14 செப்டம்பர், 2026

ஆசியாவிலேயே மிகப்பெரிய 19 அடி உயர புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய 19 அடி உயர புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு!

2 டன் மலர்களால் பிரம்மாண்ட ராஜ அலங்காரம்; அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, ஆசியாவிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலையான கோவை புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனத்தால் பிரம்மாண்ட காப்பு சாத்தப்பட்டு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. 

கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையைக் கொண்ட ஆன்மீகத் தலமாகத் திகழ்கிறது. ஒரே பாறைக் கல்லால் செதுக்கப்பட்ட இந்த மூலவர் சிலை, சுமார் 19 அடி உயரமும், 10 அடி அகலமும், 190 டன் எடையும் கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

இன்று விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு முந்தி விநாயகருக்குத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சுமார் 50 கிலோ தூய சந்தனத்தைக் கொண்டு விநாயகர் விக்கிரகம் முழுவதற்கும் 'சந்தனக் காப்பு' சாத்தப்பட்டு திவ்விய ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

​மேலும், மல்லிகை, முல்லை, செவ்வந்தி மற்றும் ரோஜா உள்ளிட்ட சுமார் 2 டன் எடை உள்ள வண்ணமயமான மலர்களைக் கொண்டு திருக்கோயில் வளாகமும் விநாயகர் பேரொளியும் கண்கொள்ளாக் காட்சியாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

சதுர்த்தி நன்னாளை முன்னிட்டு, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே லட்சக் கணக்கான பக்தர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். 

பக்தர்கள் அனைவரும் "ஓம் கணபதி" என்ற பக்தி கோஷத்துடன் நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து அருள்மிகு முந்தி விநாயகரைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

​பக்தர்கள் சிரமமின்றி விரைவாகத் தரிசனம் செய்து செல்ல ஏதுவாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிரத்யேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு விசேஷ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

 கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் காவல் ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்ற போது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.

கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 12-ம் தேதி இரவு சிறுமி தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்தோஷ் (24), தவசி (28) ஆகிய இருவரும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளை தவசி மறைத்து வைத்திருந்த இடத்திற்கு, அதை கைப்பற்றுவதற்காக காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அவரை இன்று மாலை அழைத்துச் சென்றனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற தவசியை, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பலமுறை எச்சரித்தும் தவசி மீண்டும் அரிவாளால் தாக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்ட உடனடி ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தவசியின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவர் மீதும் சட்டப்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 "14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

"14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தற்காப்பிற்காகக் காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

 கோவை மாநகரில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர், மறைத்து வைத்து இருந்த அரிவாளை மீட்க அழைத்துச் சென்ற போது பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கித் தப்பியோட முயன்றதால், காவல்துறையினர் அவரைத் தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரம், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (12.09.2026) இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகாரளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

​விசாரணையில், சந்தோஷ் (24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் சேர்ந்து அச்சிறுமியைக் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

 இதை அடுத்து, தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்து இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதாக எதிரி தவசி தெரிவித்து உள்ளார். அதன் பேரில், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான காவல் குழுவினர், தவசியை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

​அப்போது, அங்கு மறைத்து வைத்து இருந்த அரிவாளைத் திடீரெனக் கையில் எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியைப் பயங்கரமாக வெட்டினார். இதில் ஆய்வாளரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆய்வாளரை வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்ற தவசியைப் பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் உடனடியாக எச்செரித்தனர். எனினும், எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அரிவாளுடன் காவல் அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், காவல் அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டுத் தற்காப்பு நடவடிக்கையாக தவசியின் இடது காலில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார்.

​துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளி தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

​கைது செய்யப்பட்ட சந்தோஷ் மற்றும் தவசி மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யக் கோவை மாநகரக் காவல்துறை முன்னுரிமை அளித்து வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

குழந்தைகள் வார்டில் நெகிழ்ச்சி சம்பவம்: பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத் குமாரும் பங்கேற்பு!

 கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது குழந்தைகள் வார்டில் இருந்த சிறுமி ஒருவர் அமைச்சருடன் சுவாரசியமாக உரையாடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் மற்றும் அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் கோவைக்கு வருகை தந்து இருந்தனர்.

இந்நிகழ்வுகளின் இடையே, கோவை அரசு தலைமை மருத்துவமனைக்குத் திடீரெனச் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், அங்கு இருந்த வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மற்றும் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

மருத்துவமனையின் குழந்தைகள் நல வார்டை ஆய்வு செய்ய அமைச்சர் சென்ற போது, அங்குச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அப்போது அச்சிறுமி எவ்வித தயக்கமுமின்றி, அமைச்சரிடம் மிகவும் மழலை மொழியில் உற்சாகமாகப் பேசினார்.

சிறுமியின் பேச்சைக் கேட்டுப் புன்னகைத்த அமைச்சர், அவருக்கு அளித்துவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், அச்சிறுமிக்கு ஆறுதலும் அன்பும் தெரிவித்தார்.

 அமைச்சரும் சிறுமியும் அன்போடு பேசிக்கொண்ட இந்த அழகான தருணம் அங்கு இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் கவனத்தையும் ஈர்த்தது.

சனி, 12 செப்டம்பர், 2026

"பிரிமியம் பத்மினி முதல் மாடர்ன் கார் வரை" ; கோவையில் களைகட்டிய பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன விற்பனை மேளா!

"பிரிமியம் பத்மினி முதல் மாடர்ன் கார் வரை" ; கோவையில் களைகட்டிய பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன விற்பனை மேளா!

வாடிக்கையாளர்கள் குவிந்ததால் விற்பனை மேளாவை நீட்டிக்கத் திட்டம் : துடியலூர் அருகே ஆயிரக் கணக்கான கார்கள் அணிவகுப்பு!

 கோவை, மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனக் கண்காட்சி மற்றும் விற்பனை மேளாவில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்து தங்களுக்குப் பிடித்த வாகனங்களை மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட முன்னணிப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன (Used Cars) விற்பனை நிறுவனங்கள் இணைந்து நடத்திய அதிரடி விற்பனை மேளா கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

​இந்தக் கண்காட்சியில் பழமையான பாரம்பரியமிக்க 'பிரிமியம் பத்மினி' (Premier Padmini) கார்கள் முதல் சந்தைக்கு வந்த அதிநவீன ரக மாடர்ன் நான்கு சக்கர வாகனங்கள் வரை ஆயிரக் கணக்கான கார்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. ஒரே இடத்தில் பல்வேறு பிராண்டுகளின் கார்களை நேரில் பார்த்துத் தேர்வு செய்ய முடிவதால், இந்த மேளா வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் குடும்பங்களின் தேவைகளும் பயணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் வெளியூர்களுக்குச் செல்லும் போது, பொதுப் போக்குவரத்து அல்லது பேருந்துகளில் குடும்பத்துடன் பயணிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. மேலும் அதிக நேரம் விரயமாவதோடு, நீண்ட நேரப் பயணத்தால் உடல்நலக் குறைபாடும் உடல் அசதியும் ஏற்படுகிறது.

​ஒரு குடும்பத்தினர் பாதுகாப்பாகவும், விரைவாகவும், எவ்வித உடல் அசதியுமின்றி உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் சென்று வருவதற்குச் சொந்தமாக நான்கு சக்கர வாகனம் வைத்து இருப்பதே சிறந்தது என்பதால், பொதுமக்கள் மத்தியில் கார்களின் பயன்பாடும் தேவையும் பெருமளவில் அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக, இந்த மேளாவில் ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து, ஒரே இடத்தில் தங்களுக்குப் பிடித்தமான கார்களைப் பார்வையிட்டு, மற்றும் வசதிக்கு ஏற்ற வாகனங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

​மக்கள் இடையே கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர்களின் வருகை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாக, இந்த விற்பனை மேளாவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க விற்பனை நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

 போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச் சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் லீ மான்ஸ் கோப்பை தொடரில், நடிகரும் ரேசருமான அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், செப்டம்பர் 10-ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் ஓடுதளத்திற்கு (Silverstone Circuit) சென்ற முதலமைச்சர் விஜய், உலகப்புகழ் பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். லீ மான்ஸ் கோப்பை நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று இந்த சர்வதேச நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச்சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் போட்டியில் பங்கேற்கும் சக வீரர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, அஜித் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடயை காரில் அமர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திய நேரப்படி, இரவு 9.40 மணிக்கு லீமான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் தவிர்த்து, இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மேலும் முன்னதாக சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் குமார், தமது அழைப்பை ஏற்று இங்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக தல - தளபதி என்று கொண்டாடப்பட்ட, கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஜோசப் விஜய்யும், அஜித் குமாரும் லண்டனில் சந்தித்துக் கொண்டது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 "விவசாய நிலத்தில் 12 அடி நீள ராஜநாகம்" ;  அலறி ஓடிய தொழிலாளர்கள் - அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்த மேட்டுப்பாளையம் வனத்துறை!

"விவசாய நிலத்தில் 12 அடி நீள ராஜநாகம்" ; அலறி ஓடிய தொழிலாளர்கள் - அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்த மேட்டுப்பாளையம் வனத்துறை!

தேக்கம்பட்டியில் சுற்றிய கொடிய விஷப்பாம்பு: காரமடை அருகே பரபரப்பு!


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள காரமடை தேக்கம்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய ராஜநாகம்  உயிருடன் மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதி பவானி ஆற்றின் கரையோரத்திலும் வனப்பகுதியை ஒட்டியும் அமைந்து உள்ளதால், காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு அதிகமாகக் காணப்படும். தென்னை, வாழை, பாக்கு மற்றும் காய்கறி விவசாயம் இங்குப் பிரதானமாக நடைபெற்று வருகிறது.

​இந்நிலையில், தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (55) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இருந்த புதர் பகுதிக்குள் பிரம்மாண்டமான நாகப்பாம்பு ஒன்று சீறிக்கொண்டு இருப்பதைக் கண்ட பணியாளர்கள், அதிர்ச்சியிலும், அச்சத்திலும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

உடனடியாக இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

​புதருக்குள் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைப் பரிசோதித்த போது, அது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்ட சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் என்பது தெரியவந்தது.

 வனத்துறையினர் சாதுரியமாகச் செயல்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அந்த ராஜநாகத்தைப் பாதுகாப்பான முறையில் உயிருடன் பிடித்தனர்.

பிடிபட்ட 12 அடி ராஜநாகத்தைப் பிளாஸ்டிக் பேரலில் பாதுகாப்பாக அடைத்த வனத்துறையினர், அதைத் தேக்கம்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர்.

​விவசாய நிலத்திற்குள் கொடிய விஷமுடைய 12 அடி ராஜநாகம் புகுந்து பிடிபட்ட சம்பவம், அப்பகுதி விவசாயிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


வெள்ளி, 11 செப்டம்பர், 2026

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை" ; அனைத்துக் கட்சியினர் திரண்டு மலரஞ்சலி!

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை" ; அனைத்துக் கட்சியினர் திரண்டு மலரஞ்சலி!

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு: காந்தி சிலை பேருந்து நிலையத்தில் அன்னதானம்!

​ கோவை மாவட்டம், வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகியும் சமூக நீதிப் போராட்ட வீரருமான இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வால்பாறை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

​விழாவையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினர் குட்டி என்ற ஆ. சுதாகர், அ.தி.மு.க நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கல்யாணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் செந்தில் முருகன், புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளர் அமிர்தராஜ், ஒன்றியச் செயலாளர் தனசிங், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கோவை பொன்னன், புதிய தமிழகம் தொழிற்சங்கத் தலைவர் பால்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேத்யூ, வெள்ளியங்கிரி, வால்பாறை நகர்மன்றத் துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த குருபூஜை விழாவில், அஞ்சலி செலுத்த வந்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்களும் சமுதாயப் பெரியோர்களும் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்குப் புகழஞ்சலி செலுத்தினர்.

 "10 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு விடிவு காலம்" ; தமிழக அரசுக்கு அரசுப் போக்குவரத்து ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் நெகிழ்ச்சி நன்றி!

"10 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு விடிவு காலம்" ; தமிழக அரசுக்கு அரசுப் போக்குவரத்து ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் நெகிழ்ச்சி நன்றி!

வால்பாறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பு!

​அரசுப் போக்குவரத்து இயக்கக ஓய்வூதியதாரர்களின் 10 ஆண்டு காலக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற ரேவா சங்க ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களின் நலன்களுக்காக ரேவா சங்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (DA Hike) மற்றும் நிலுவைத் தொகையான அரியர்ஸ் (Arrears) வழங்கிட வேண்டும் என ரேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கடந்த ஆட்சி காலத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

​இருப்பினும், முந்தைய ஆட்சியாளர்களால் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இழுபறியாகவே நீடித்து வந்ததால், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கும் சிரமத்திற்கும் ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பின் பொறுப்பேற்று உள்ள புதிய தமிழக அரசின் கவனத்திற்கு ரேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் இக்கோரிக்கைகளை நேரில் கொண்டு சென்று தீவிரமாக வலியுறுத்தினர்.

 ஓய்வூதியதாரர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்த தமிழக அரசு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சுமார் 10 ஆண்டு கால பணப் பலன்களை வழங்க முன்வந்தது.

​இதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் ரேவா சங்கத்தின் வால்பாறை கிளை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 வால்பாறை கிளைச் சங்கத் தலைவர் நாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களின் 10 ஆண்டு கால நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்த தமிழக அரசுக்கும், இதற்குத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தீர்வு காணத் துணை புரிந்த ரேவா சங்க மாநில நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துச் சிறப்பாய்த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


​இக்கூட்டத்தில் ரேவா சங்கச் செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் கருணாநிதி, துணைத் தலைவர்கள் சந்திரன், கல்யாணராஜ், ராமன், துணைச் செயலாளர்கள் தங்கராஜ், ஜெபக்கனி, செல்வக்குமார், சின்னச்சாமி, மத்திய சங்க நிர்வாகிகள் சின்னப்பன், மாரியப்பன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

விசாரணை முடிந்த பின் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைப்பு!

 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்காவில் பணியாற்றிய என்ஜினீயரைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை முடிந்த பின்பு சிறையில் அடைப்பு

கோவை மாநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், முதன்மைத் தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படை போலீசார் அங்குச் சென்று தீவிர சோதனை மேற் கொண்ட போது, அது வெறும் போலி மிரட்டல் (Hoax Threat) என்பது தெரியவந்தது. இது குறித்துக் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதே பாணியில் தமிழகம் முழுவதும் உள்ள பல முக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இது தொடர்பாகச் சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் தீவிர தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியம் சங்கர் என்பதும், இவர் அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயராக (Software Engineer) பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

 இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து அண்மையில் சென்னை திரும்பிய சரத் சுப்பிரமணியம் சங்கரைச் சென்னை போலீசார் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாநகரில் மட்டும் இவருக்கு எதிராகத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 சைபர் கிரைம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்குச் சென்ற கோவை மாநகர சைபர் கிரைம் தனிப்படை போலீசார், சரத் சுப்பிரமணியம் சங்கரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.

 இச்சம்பவம் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சரின் புகைப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி வைரலாகும் காட்சி!

முதலமைச்சரின் புகைப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி வைரலாகும் காட்சி!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் காலையில் விலையில்லா விருந்தகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேத்துப்பட்டு நகர தவெக சார்பில் நடைபெற்ற விலையில்லா விருந்தகத்திற்கு வந்திருந்த வயதான மூதாட்டி ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சரின் உருவப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தியுள்ளார்.

மூதாட்டியின் இந்த செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

புதன், 9 செப்டம்பர், 2026

"விமான நிலையப் பின்பகுதியில் கெமிக்கல் கழிவுகள் வீச்சு" ; வழுக்கி விழுந்து படுகாயமடையும் வாகன ஓட்டிகள் -கோவையில் பரபரப்பு!

"விமான நிலையப் பின்பகுதியில் கெமிக்கல் கழிவுகள் வீச்சு" ; வழுக்கி விழுந்து படுகாயமடையும் வாகன ஓட்டிகள் -கோவையில் பரபரப்பு!

இரசாயனத்தை அப்புறப்படுத்தவும், வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கைது செய்யவும் பொதுமக்கள் கொந்தளிப்பு!

​கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள மண் சாலையில் மர்ம நபர்கள் கழிவு கெமிக்கல் பாக்கெட்டுகளை வீசிச் சென்றதால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி பயன்படுத்தும் மண் சாலை உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், அப்பகுதியில் ஆபத்தான கெமிக்கல் பாக்கெட்டுகளைச் சாலையில் கொட்டி விட்டுத் தப்பிச் சென்று உள்ளனர்.

​அந்தப் பாக்கெட்டுகளில் இருந்து இரசாயனக் திரவம் கசிந்து சாலை முழுவதிலும் பரவியதால், மண் சாலை முற்றிலும் வழவழப்பாக மாறி உள்ளது.

இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்கள் பலர், சாலையில் கெமிக்கல் கொட்டப்பட்டு இருப்பதை அறியாமல் சென்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி விழுந்தனர். இதில் பலருக்குக் கை, கால்களில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளன.

​தொடர்ந்து அடுத்தடுத்து வாகனங்கள் வழுக்கி விழுவதைக் கண்ட அப்பகுதி வாசிகள் உடனடியாக ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

 ஆபத்தான முறையில் கெமிக்கலைச் சாலையில் கொட்டிச் சென்ற நபரைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

​மேலும், அந்த மண் சாலையில் பரவி உள்ள இரசாயனக் கழிவுகளைத் மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 நகரின் பாதுகாப்பு மண்டலமான விமான நிலையப் பகுதியிலேயே கெமிக்கல் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"1980ஸ் ரெட்ரோ லுக்கில் வானதி சீனிவாசன்" ; ChatGPT / AI தொழில்நுட்பத்தில் உருவான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

"1980ஸ் ரெட்ரோ லுக்கில் வானதி சீனிவாசன்" ; ChatGPT / AI தொழில்நுட்பத்தில் உருவான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

 ரசிகர்களையும் அரசியல் வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்திய ஏஐ படைப்பு : சமூக வலைதளங்களில் குவியும் லைக்ஸ்!

 பா.ஜ.க தேசிய மகளிர் அணி முன்னாள் தலைவரும் வானதி சீனிவாசனின் புகைப்படங்களை, ஏஐ (ChatGPT / Generative AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1980-களின் ரெட்ரோ (1980s Retro Look) பாணியில் உருவாக்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவி வைரலாகி வருகின்றன.

இணையத்தைக் கலக்கும் ஏஐ ரெட்ரோ ட்ரெண்ட்:

தற்போது சமூக வலைதளங்களில் ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை வைத்துப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை 1980-கள் மற்றும் 90-களின் சினிமா கதாநாயகர்கள், கதாநாயகிகள் பாணியில் ரெட்ரோ லுக்கிற்கு மாற்றிப் பதிவிடும் ட்ரெண்ட் தீவிரமாகப் பரவி வருகிறது.

​அந்த வகையில், கோவை முன்னாள் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனை 1980-களின் ரெட்ரோ மாடலாகச் சித்தரித்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு இணையத்தில் வெளியாகி உள்ளது.

1980ஸ் பாணியில் வானதி சீனிவாசன்

இந்தச் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களில், 80-களின் பிரத்யேக ஆடை அலங்காரம், பழைய காலத்துப் புடவைகள், ரெட்ரோ ஹேர் ஸ்டைல் மற்றும் அக்காலப் புகைப்படங்களின் வண்ண அமைப்போடு வானதி சீனிவாசன் காட்சி அளிக்கிறார்.

​அரசியல் களத்தில் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் ஒரு தலைவரை, முற்றிலும் மாறுபட்ட 1980-களின் ரெட்ரோ தோற்றத்தில் கண்ட பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரல்:

இந்த ஏஐ புகைப்படங்கள் எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. "80-களின் திரைப்படக் கதாநாயகி போலவே இருக்கிறார்", "ஏஐ தொழில்நுட்பத்தின் அட்டகாசமான படைப்பு" என நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர்.

 "உருவக்கேலி செய்ததால் ஆத்திரம்" ; கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

"உருவக்கேலி செய்ததால் ஆத்திரம்" ; கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

ஈ-காமர்ஸ் நிறுவன ஊழியர்கள் இடையே போதையில் மோதல்: தப்பியோடிய முதன்மை குற்றவாளிக்குச் சூலூர் போலீஸ் வலை!

 கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கொடூரமான முறையில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரைச் சூலூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

கோவை, பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் வெற்றுச் செங்கல் கொட்டகை ஒன்றில், வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகச் சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 விசாரணையில், இறந்து கிடந்தவர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பிரபல ஈ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனத்தின் கிடங்கில் (Warehouse) பணியாற்றி வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த ராஜன் எ (எ) ராமேஸ்வர் சா என்பது தெரியவந்தது.

இக்கொலை சம்பவம் குறித்துச் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடன் பணி புரியும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராஜனின் உடல் தோற்றத்தைக் குறித்து அவருடன் பணி புரியும் சக ஊழியரான ஜெகதீஷ் என்பவர் அடிக்கடி கேலி செய்து வந்ததும், இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்ததும் அம்பலமானது.

கடந்த 5-ஆம் தேதி இரவு, ராஜன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். அப்போது, அவரைத் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோ ஆகியோர் அழைத்துச் சென்று உள்ளனர்.

செங்கல் கொட்டகை அருகே சென்ற போது, உருவக்கேலி தொடர்பாக ராஜனுக்கும், ஜெகதீஷுக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ், அங்கு இருந்த செங்கல்லை எடுத்து ராஜனின் தலையில் சரமாரியாகத் தாக்கி உள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு மத்தயாஸ் மல்டோ முழுமையாக உடந்தையாக இருந்து உள்ளார்.

இதை அடுத்து தலைமறைவாக முயன்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோவைச் சூலூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய முதன்மை குற்றவாளியான ஜெகதீஷைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.