வியாழன், 30 ஜூலை, 2026

23 வருஷக் கண்ணீருக்குப் பலன் கிடைச்சிருச்சு” ; பஞ்சாப்பில் கொத்தடிமையாக மீட்கப்பட்ட மகன் - கோவையில் தாய் கண்ணீர் மல்க வரவேற்பு !!!

SHARE

 “23 வருஷக் கண்ணீருக்குப் பலன் கிடைச்சிருச்சு” ; பஞ்சாப்பில் கொத்தடிமையாக மீட்கப்பட்ட மகன் - கோவையில் தாய் கண்ணீர் மல்க வரவேற்பு !!!

பாகிஸ்தான் எல்லையில் மீட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம்: மாற்றுச் சான்றிதழ் வழங்கி கோவை ஆட்சியர் !!!

 கோவையில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மூத்த மகனைப் பஞ்சாப் மாநிலத்தில் கொத்தடிமையாக இருந்துவர் மீட்டு, கோவைக்கு அழைத்து வந்த தாயின் நெகிழ்ச்சிச் சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்து உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியருக்கு இரு மகன்கள் இருந்தனர். கடந்த 1999-ல் கணவர் இறந்ததை அடுத்து, சுந்தரி பிழைப்பு தேடி தனது மகன்களுடன் 2000-ஆம் ஆண்டில் கோவை, கவுண்டம்பாளையம் பகுதிக்கு வந்து குடியேறினார்.

 இந்நிலையில், கடந்த 2003-ஆம் ஆண்டு இவரது 12 வயது மூத்த மகன் பிரகாஷ் திடீரென மாயமானார். மகனைத் தேடித் தாய் சுந்தரி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், பிரகாஷ் பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் யாரோ சிலரால் கடத்தப்பட்டு கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டது தெரியவந்தது.

சண்டிகரைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் சமீபத்தில் மீட்கப்பட்ட பிரகாஷை, தாயிடம் ஒப்படைக்கச் அரசு ஆவணங்கள் தேவைப்பட்டன.

 இதற்காகத் தாய் சுந்தரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்தார். மனுவை விசாரித்த ஆட்சியர், பிரகாஷ் கோவையில் 3-ஆம் வகுப்பு வரை படித்த பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC) உள்ளிட்ட அரசு ஆவணங்களை உடனடியாகத் தயார் செய்து வழங்கினார்.

அரசு ஆவணங்களுடன் பஞ்சாப் விரைந்த தாய் சுந்தரியிடம், சான்றிதழ்களைச் சரிபார்த்து அதிகாரிகள் பிரகாஷை ஒப்படைத்தனர். 

23 ஆண்டுகளுக்குப் பிறகு தாயைக் கண்டதும் பிரகாஷ் அடையாளம் கண்டுகொள்ள, சுந்தரி கண்ணீர் மல்க மகனை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டார்.

மீட்கப்பட்ட மகனுடன் கோவை திரும்பிய சுந்தரி நெகிழ்ச்சியுடன் கூறுகையில், 

"23 வருஷமா நான் வடித்த கண்ணீருக்கும் பிரார்த்தனைக்கும் கடவுள் பலன் தந்துட்டாரு. என் மகன் உயிருடன் வருவான்னு நம்பிக்கை இருந்தது. என் மகனை என்னுடன் சேர்க்க உதவி செய்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர் முத்தையா ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: