இருகூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா வேட்டை... மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்ட 6.7 கிலோ கஞ்சா பறிமுதல் : காய்கறி வியாபாரி உட்பட 4 பேர் கைது !!!
கோவை, இருகூர் ரயில் நிலையப் பகுதியில் மூட்டைகளில் அடைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற காய்கறி வியாபாரி உள்ளிட்ட 4 பேர் கொண்ட போதை கும்பலை, சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் தலைமையிலான போலீசார் கையும், களவுமாகப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருகூர் ரயில் நிலையத்தில் ரகசிய ரோந்து – லாக் ஆன போதை கும்பல்:
கோவை, சிங்காநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் மற்றும் போலீசார், இருகூர் ரயில் நிலைய சுற்றவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் சில வாலிபர்கள் பெரிய மூட்டைகளுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், அவர்கள் வைத்து இருந்த மூட்டைகளைச் சோதனை செய்தனர்.
6.7 கிலோ கஞ்சா பறிமுதல் – பின்னணியில் காய்கறி வியாபாரி:
போலீசாரின் சோதனையில், மூட்டைகளுக்குள் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 6 கிலோ 700 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 4 வாலிபர்களையும் உடனடியாகச் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கெடுபிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கைதான நபர்கள் சூலூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி அக்கீம் சேட் (33), சிவகங்கையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வினோத் (33), டிரைவர் கீர்த்திவாசன் (21) மற்றும் கோவை வடுகன்காளிப் பாளையத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ரியாசுதீன் (28) என்பது தெரியவந்தது. காய்கறி வியாபாரம் மற்றும் கூலித் தொழிலின் மறைவில் இவர்கள் கஞ்சா வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.
வழக்குப் பதிவு - அதிரடி சிறையிலடைப்பு:
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 6.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள முதன்மை சப்ளையர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர டிராக்கிங் செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்: