த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது !!!
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ விடம் பேரம் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ டாக்டர் என்.இளையராஜாவை சில தினங்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்ற நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் இந்தியன் பொலிட்டிக்கல் டெமாக்ரடிக்ஸ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில் இளையராஜாவிடம் பேசுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
ஆனால் அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்து தொலைபேசி இணைப்பை துண்டித்து உள்ளார். இதை அடுத்து மீண்டும் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் கூறும் வகையில் செயல்பட்டால் 35 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக இருப்பதாக பேரம் பேசி உள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா இனி தம்மை தொடர்பு கொள்ள வேண்டாம் என கண்டிப்புடன் கூறி உள்ளார். இதை அடுத்து, இந்த விவகாரத்தை வெளியில் தெரிவித்தால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டல் விடுத்து உள்ளதாக தெரிகிறது.
இதை அடுத்து, தனக்கு மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா கடந்த ஜூன் 29-ஆம் தேதி புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரின் பின்னணியில் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த ரமேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவரையும் கடந்த ஜூலை 1 ஆம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பெயரில் இந்த பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேரை திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் செயல்படுவதாக காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவரை தீவிரமாக கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைதாகி சிறையில் உள்ள 8 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் வெளியாகின.
கைதானவர்கள், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியிலும், அதேபோல் சென்னை கிண்டியில் உள்ள ஒரு விடுதியிலும் தங்கி இந்த பேரம் பேச திட்டங்களை தீட்டி வந்தது தெரியவந்து உள்ளது.
இதன் பின்னணியில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம், செயல் திட்டங்களை தீட்டிதும் போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. பேரம் பேசுவதற்காக சுமார் 180 கோடி ரூபாய் வரை ஒதுக்கியதும் விசாரணையில் தெரியவந்தது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனம்தான் இவர்களை சென்னையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைத்து, எந்தெந்த எம்.எல்.ஏ க்களிடம் பேரம் பேசலாம் என்று திட்டம் தீடியதும், அதன் அடிப்பையில் ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவை தொடர்பு கொண்டு பேசியதும் தெரியவந்தது. எனவே, இந்த திட்டத்தின் பின்னணியில் செயல்பட்ட கார்ப்பரேட் நிறுவனம் குறித்தும், அதில் உள்ள நபர்கள் குறித்தும் போலீஸார் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர். ஏற்கனவே கைதான திருநாவுக்கரசு என்பவரின் கார் ஓட்டுனரான கிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில் கைதான 9-வது நபர் இவர் ஆவார்.
கிருஷ்ணாவும் த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதில் முக்கிய பங்கு வகித்து உள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணாவை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிரவு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

0 கருத்துகள்: