இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் 3 மணி நேரம் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, திருமழிசை மின்மயானத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை ஆதவன் நகரை சேர்ந்த அப்பன் ராஜ் (வயது 75) என்ற முதியவர், வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதிச்சடங்கை திருமழிசை - திருவள்ளூர் சாலையில் உள்ள மின் மயானத்தில் நடத்த உறவினர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக, உயிரிழந்த அப்பன் ராஜின் உடலை அவரது உறவினர்கள் எடுத்துக் கொண்டு மாலை 6 மணிக்கு மின் மயானத்திற்கு வந்து உள்ளனர். ஆனால் மின்மயானத்தில் மின்சாரம் இல்லாததால் உறவினர்கள் நீண்ட நேரம் காத்து இருந்ததாக தெரிகிறது.
பின்னர் திருமழிசை பேருராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை அடுத்து பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ பிரகாசம் மற்றும் திருமழிசை பேருராட்சி தலைவர் ஆகியோரை தொடர்புகொள்ள முயன்ற போது, அவர்கள் தொலைபேசி அழைப்பை ஏற்றதாக தெரியவில்லை.
இதை அடுத்து, அப்பன் ராஜ் உடலை தகனம் செய்ய முடியாமல் தவிப்பதாக அவருடைய மகன் வினோத் பாரதி வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
இறந்தவர் உடலை மாலை 6 மணிக்கு மின் மயானத்திற்கு கொண்டு வந்த உறவினர்கள், 3 மணி நேர தாமதத்திற்குப் பிறகு, ஜெனரேட்டரை வரவழைத்து இரவு 9 மணிக்கு தகனம் செய்தனர்.
ரூபாய் 1.5 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள திருமழிசை மின்தகன மேடை, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சம்பவத்தன்று, திருமழிசையில் அனைத்து பகுதியிலும் மின்சாரம் இருந்த நிலையில், மயானத்தில் மட்டும் மின்சாரம் இல்லை. அன்று மாலை, மயானத்திற்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதால், மின்சாரம் தடைபட்டு உள்ளது. மயானத்தில் உள்ள ஜெனரேட்டரும் பழுதாகி இருந்து உள்ளது. இதனால் மின் மயானத்தில் மின்சாரம் தடைபட்டு, இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருமழிசை மின் மயானத்தில் உள்ள கேபிள்களில் பிரச்சினை இருந்தது. மின்சாரம், மின்மயானம் வரை தான் வந்தது. கேபிளில் பிரச்சினை ஏற்பட்டதால் அதை சரி செய்ய நேரம் ஆகும் என்பதால் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து தகனம் செய்யப்பட்டது. அங்கு மின்சார தட்டுப்பாடு கிடையாது. பாதிக்கப்பட்ட நபருக்கு மின்மயானத்தில் இருந்த கேபிள் பிரச்சினை குறித்து தெரியாது. அதனால் மின்தடை என்று தான் சொல்வார்கள்” என்றார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், மின் மயானத்திற்கு வந்து, எதனால் மின்சாரம் தடைபட்டது என்று ஆய்வு செய்தனர். மின்மயானத்திற்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ள நிலையில், தற்காலிக டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி தற்காலிக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டது.
மேலும், மின்மயானத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து செல்லும் மின்சார கேபிள்கள் பழுதாகி இருப்பதால், மின்தகன மேடைக்கு மின்சாரம் செல்லவில்லை என்பதும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது. உடனே ஜெனரேட்டரை பொருத்திய சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தை அதிகாரிகள் தொடர்புகொண்டு, உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மின்மயானத்திற்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்து உள்ளனர்.

0 கருத்துகள்: