சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு உள்ள ஜெம் வீரமணியை மேலும் இரண்டு வழக்குகளில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன், ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு மற்றும் சக்திவேல் என இந்த வழக்குகளில் இதுவரை 8 பேர் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில், அக்.21- ஆம் தேதி வரை ஜெம் வீரமணி மீது 8 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டு உள்ளன. இதில் குற்ற வழக்கு எண் 174/2025, 11/2026, 12/2026, 13/2026 ஆகிய நான்கு வழக்குகளில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதே போல், ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரை நீதிமன்ற உத்தரப்படி இரண்டு நாள்கள் காவலில் எடுத்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து, கைப்பற்றிய சான்று பொருட்களின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதே போல், ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவிடம் அவரது தந்தையின் குற்றச் செயல்கள் குறித்தும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு அவர் மேற்கொண்டதாக கூறப்படும் பணப்பரிமாற்றங்கள் குறித்தும், சிறப்பு புலனாய்வுக் குழுவினரின் விசாரணை நடைபெற்றது.
மேலும், ஜெம் வீரமணி மீதான வழக்குகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 5 நபர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஜெம் வீரமணி மீதான வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், குற்ற வழக்கு எண்: 15/2026, 16/2026 ஆகிய இரண்டு வழக்குகளின் கீழ் ஜெம் வீரமணியை கைது செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா இன்று (அக்.27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதை அடுத்து, இரு வழக்குகளிலும் ஜெம் வீரமணியை வரும் நவம்பர் 10- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி எஸ்.பத்மா உத்தரவிட்டு உள்ளார்.
இதுவரை ஜெம் வீரமணி மீது பதிவுச் செய்யப்பட்டு உள்ள 8 வழக்குகளில் 6 வழக்குகளில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அவரை கைது செய்து உள்ளனர்.

0 கருத்துகள்: