திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறி உள்ளார்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
உலகப் பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலையில் அமைந்து உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் வரும் நவ.12- ஆம் தேதி முதல் நவ.28- ஆம் தேதி வரை விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்திருவிழா வரும் நவ.24- ஆம் தேதி நடைபெறும். தீபத்திருவிழாவைக் காண திருவண்ணாமலை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக் கணக்கான பக்தர்கள் வருகைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபத்திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணைந்து பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள், மருத்துவ முகாம்கள், அன்னதானம் வழங்கும் இடங்கள், போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இந்த நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று (அக்.17) அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சுற்றியுள்ள மாட வீதி பகுதிகளில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளையும், செங்கம் சாலையில் அமைய உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அருணாசலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும், கிரிவல பாதையையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, அசாம் மாநிலத்திலிருந்து அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட கோயில் யானைக்கு 'நவச்சிவாயா' என அமைச்சர்கள் பெயர் சூட்டினர்.
அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டமும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திக்கை தீபத்திருவிழாவிற்கு உலகமெங்கிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் எவ்வித இடையூறு இல்லாமல் தரிசனம் செய்யவும், கிரிவலம் செய்யவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், அவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் ஆகிய நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அதற்கேற்றார் போல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றார்.
இந்நிகழ்வின் போது, திருக்கோயிலுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் திருக்கோயில் வளாகத்தில் மின்கள் சக்கர நாற்காலிகளை அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர்.

0 கருத்துகள்: