மருத்துவமனையில் தனது தந்தை தேவாவுக்கு சிகிச்சை அளித்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை என ஸ்ரீகாந்த் தேவா வேதனையுடன் தெரிவித்தார்.
மறைந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் இறுதிச்சடங்கு நாளை (அக்.18) ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் நடைபெறும் என்று அவரது மகனும், இசை அமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்து உள்ளார்.
பிரபல இசை அமைப்பாளரான தேனிசைத் தென்றல் தேவா இன்று (அக்.17) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றன.
சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள தேனிசைத் தென்றல் தேவாவின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் எம்.பி., 'பாட்ஷா' திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசை அமைப்பாளர்கள் டி.இமான், ஹிப் ஹாப் தமிழா ஆதி, பாடகி சின்மயி, கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர்கள் சிவக்குமார், சரத்குமார், பிரசாந்த், மன்சூர் அலிகான், நடிகைகள் மீனா, ராதிகா, இசைமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் பிரேம் ஜி உள்ளிட்டோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, தமிழ் திரையுலகினர் தேவாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தேனிசைத் தென்றல் தேவாவின் மகனும், இசை அமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா, "இன்று காலை தனது தந்தை தேவாவிற்கு நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மருத்துவமனையில் தனது தந்தைக்கு சிகிச்சை அளித்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை.
தனது தந்தையின் மறைவு குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இறுதிச் சடங்கு ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் நாளை (அக்.18) மாலை 4 மணி அளவில் உடல் நல்லடக்கம் செய்யப்படும். தேவாவின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

0 கருத்துகள்: