புதன், 28 அக்டோபர், 2026

தேனியில் கைதிகள் தப்பியோடிய விவகாரம்; தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை !

SHARE

 தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் காவல்துறை மற்றும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்து உள்ளது. இந்தச் சிறையில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அக்டோபர் 26 ஆம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் சிறையில் இருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களைத் தாக்கி விட்டு தப்பியோடினர். ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை தப்பியோடிய 13 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்

இதற்கு இடையே, சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களின் பொறுப்புகள் குறித்து ஆய்வு செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில், சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறை இயக்குநர், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நிலவரம், கைதிகள் தொடர்பான புள்ளி விவரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவது மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேனி சிறையில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் மட்டுமின்றி, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள், அவற்றைத் தடுப்பதற்கான காவல் துறையின் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய வழக்குகளின் விசாரணை நிலவரம் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: