ஞாயிறு, 5 ஜூலை, 2026

அ.தி.மு.க - தி.மு.க ரகசியக் கூட்டணி திட்டம் 100% உண்மை தான்” ; கோவையில் த.வெ.க அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்புப் பேட்டி !!!

SHARE

 அ.தி.மு.க - தி.மு.க ரகசியக் கூட்டணி திட்டம் 100% உண்மை தான்” ; கோவையில் த.வெ.க அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்புப் பேட்டி !!!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி...

கோவை மாவட்டம் நீலாம்பூரில் செயல்பட்டு வரும் கதிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத் குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது  பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதல்முறை வாக்காளர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

 தமிழகத்தில் எண்ணற்ற தலைவர்கள் தோன்றி மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவில் இன்று எல்லோருக்குமே எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் விஜய் செயல்பட்டு வருவதாகவும், 

அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரத்தைச் சரியாகக் கையாண்டு, மக்களின் கோரிக்கைகளைப் படிப்படியாக எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சம்பத் குமார், அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் வேகத்திற்குத் தம்மால் ஈடுகொடுக்க முடியாது என்றும், அவரது சுறுசுறுப்பால் அவரது வயதைக் கணிக்க இயலாது என்றும் புகழாரம் சூட்டினார். தமிழக வெற்றிக் கழக அரசு மாணவர்களுக்கான அரசு என்றும், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாணவர்களை ஊக்குவிக்கத் தலைவர் விஜய் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பெற்றோர்களையும் படிப்பையும் மனதில் கொண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர்களுள் ஒருவரான விக்னேஷ் பேசுகையில், வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றது என்றும், இடைவேளைக்கு முன்பு நாம் என்னவாகப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார். திரைப்படங்களைப் பார்த்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கக் கல்லூரிகளில் மாணவர்கள் ஒன்றிணைந்து போதை எதிர்ப்பு மன்றங்களை நிறுவ வேண்டும் என்றும், இதன் மூலம் போதைப்பொருட்களைத் தடுக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

.பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன்  பேசும் போது, செங்கோட்டையன், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதற்கான இட ஒதுக்கீடுகள் குறித்து முதல்வர் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆய்வுகள் முடிந்த பிறகு அது முறைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 தென்காசி வழியாகக் கேரளாவுக்குக் கனிம வளம் கொண்டு செல்வதற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கேரள மாநிலத்திற்கு உரத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும், தட்டுப்பாடுகளை உருவாக்குவதற்காக உரங்களைப் பதுக்கி வைப்பவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் முதல்வர் பேசியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான சரியான முடிவை முதல்வர் எடுப்பார் என்றார். மேகதாது அணையைப் பொறுத்தவரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்கிருந்து வரும் நீர் உபரி நீர் மட்டுமே தவிர, காவிரி ஆணையம் கூறியபடி குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் வருவதில்லை என்றும், தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதால் இந்த விவகாரத்தை அரசு சட்டரீதியாக அணுகும் என்றும் தெரிவித்தார்.

 மேலும், அதிமுகவின் கொள்கைகள் சரியில்லாத காரணத்தினால்தான் அக்கட்சியினர் விலகி வெற்றிக் கழகத்தை நோக்கி வருகிறார்கள் என்றும், அதிமுக மற்றும் திமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டது உண்மைதான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: