பயணத்தை ரத்து செய்து விட்டு பணத்தையும் தராத ஆம்னி பேருந்து ; ₹ 25,000 இழப்பீடு வழங்கக் கோவை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!
கடைசி நேரத்தில் பஸ் கேன்சல்... மாற்று ஏற்பாடும் இல்லை: ஏமாந்த பயணிக்கு நியாயம் வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் !!!
முன்பதிவு செய்த பயணத்தைக் கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டு, அதற்கான கட்டணத்தைத் திரும்பத் தராமல் அலட்சியம் காட்டிய தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
கோவையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குக் குடும்பத்துடன் சென்று வருவதற்காக, பிரபல தனியார் ஆம்னி பேருந்தில் 4 பேருக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். பயணத்திற்காகக் குடும்பத்துடன் தயாராக இருந்த நிலையில், "பேருந்து பழுதாகி விட்டது" எனக் கூறி கடைசி நேரத்தில் பயணத்தை ஆம்னி பேருந்து நிறுவனம் ரத்து செய்தது.
மேலும், மாற்றுப் பேருந்து எதுவும் ஏற்பாடு செய்து தராததுடன், திரும்புவதற்கான முன்பதிவையும் ரத்து செய்து அதற்குச் செலுத்திய கட்டணத்தையும் திரும்பக் கொடுக்க மறுத்து உள்ளனர்.
இதனால் பாலமுருகன் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கூடுதல் செலவில் வேறு பேருந்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நேரில் சென்று கேட்ட போதும் பேருந்து நிர்வாகம் உரிய பதில் அளிக்காததால், பாலமுருகன் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சம்பத் முத்துக்குமார் மூலமாக வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கொண்ட அமர்வு, சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி முக்கியத் தீர்ப்பளித்தது. அதில், ஆம்னி பேருந்து நிறுவனம் பயணிக்கு டிக்கெட் கட்டணத் தொகையான ரூ.5,803-ஐத் திரும்ப வழங்க வேண்டும் என்றும், அத்துடன் பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.20,000 மற்றும் வழக்குச் செலவுத் தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.25,000-க்கும் மேல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

0 கருத்துகள்: