டாக்டர் சீட்டு இல்லாம போதை மாத்திரை வித்தா குண்டாஸ்” ; கோவையில் மாணவர்களைக் குறிவைத்த மெடிக்கலுக்கு சீல் - போலீஸ் & மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை !!!
கோவை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆபத்தான போதை மற்றும் தூக்க மாத்திரைகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த அவலம் அம்பலமாகி உள்ளது. இதை அடுத்து, அந்த மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு வலி நிவாரணிகள் மற்றும் தூக்க மாத்திரைகள் போதைக்காகச் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கோவை மாநகரக் காவல்துறைக்குத் தொடர்ந்து ரகசியத் தகவல்கள் கிடைத்து வந்தன.
அதன்படி, குனியமுத்தூர் காவல் நிலையச் சரகத்திற்கு உட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில், இளைஞர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் ஆபத்தான போதை மற்றும் தூக்க மாத்திரைகள் கள்ளத்தனமாக விநியோகிக்கப்படுவதாக உறுதியான தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கோவை மாநகரக் காவல்துறையும், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறையும் இணைந்த கூட்டுச் சோதனையை மேற்கொண்டன.
D4 குனியமுத்தூர் காவல் துறையினர், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அடங்கிய தனிப்படையினர், கோவைப்புதூர், சி.பி.எம். கல்லூரி சாலையில் இயங்கி வந்த “மீனா மெடிக்கல்” மருந்தகத்திற்குள் திடீரென நுழைந்து தீவிரச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின் போது கடுமையான மருத்துவக் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டிய டாபென்டாடால் (Tapentadol) மற்றும் அல்ப்ராசோலம் (Alprazolam) உள்ளிட்ட போதைப் பழக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நரம்பியல் மாத்திரைகள் அங்குப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
தகுதியான பதிவுபெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு எதுவும் இன்றி, இந்த மருந்துகள் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், வாலிபர்களுக்கும் போதைக்காகக் கூடுதல் விலைக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இளைஞர்களின் உயிர் மற்றும் உடல்நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த இந்தச் சட்டவிரோத செயலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் “மீனா மெடிக்கல்” மருந்தகம் உடனடியாகப் பூட்டிச் சீல் வைக்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை மாநகரக் காவல்துறை அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துகள், வலி நிவாரணிகள், மனநல மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகளைப் பதிவுபெற்ற தகுதியான மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்தவொரு மருந்தகமும் விற்பனை செய்யக் கூடாது.
இந்த விதிமுறைகளை மீறிச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் மருந்தகங்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப் பரிந்துரைக்கப்படும்.
மேலும், மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இத்தகைய போதை மாத்திரை விநியோகஸ்தர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநகரில் போதைக்கு எதிராகத் தொடங்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கை தொடரும் எனப் காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

0 கருத்துகள்: