வியாழன், 16 ஜூலை, 2026

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டுப் பன்றிப் படை ; கோவையில் மரண பயத்தில் கிராம மக்கள் !!!

SHARE

 குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டுப் பன்றிப் படை ; கோவையில் மரண பயத்தில் கிராம மக்கள் !!!

ஏற்கனவே ஒருவர் பலியான கொடூரம்: குட்டிகளுடன் காட்டுப்பன்றிகள் உலா வருவதால் நடவடிக்கை எடுக்க வனத்துறைக்குக் வலியுறுத்தல் !!!

 கோவை, வடவள்ளி மற்றும் தடாகம் அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிகளுக்குள், குட்டிகளுடன் காட்டுப்பன்றி கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வரும் விவகாரம், அப்பகுதி மக்கள் இடையே ஒட்டுமொத்தமாகத் தூக்கத்தைக் கெடுத்து மரண பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலவும் அசாதாரணச் சூழல் காரணமாக, அண்மைக் காலமாகவே கோவை புறநகர்ப் பகுதிகளில் வனவிலங்குகளின் ஊடுருவல் அதிகரித்து உள்ள நிலையில், தற்பொழுது குடியிருப்புப் பகுதிகளின் பிரதான சாலைகளிலேயே காட்டுப் பன்றிகள் குடும்பத்துடன் கூட்டமாக வலம் வரும் காட்சிகள் அப்பகுதி மக்களால் பதிவு செய்யப்பட்டுச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இப்பகுதியில் நடந்து சென்ற ஒருவரைச் முட்டி, காட்டுப்பன்றி ஒன்று கொன்ற விபரீதச் சம்பவம் அரங்கேறியது 

​இப்பகுதியில் மாலை நேரங்களில் விளையாடும் குழந்தைகள் முதல் வேலைக்குச் சென்று இரவு நேரங்களில் வீடு திரும்பும் பொதுமக்கள் வரை, எப்போது எந்தப் புதரில் இருந்து காட்டுப்பன்றிகள் பாய்ந்து வருமோ ? என்ற அச்சத்துடனேயே நடமாட வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.

 காட்டுப்பன்றிகள் சாதாரணமாகத் தாக்கினாலே கடுமையான உள் காயங்களும், சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், ஏற்கனவே அரங்கேறிய மரணச் சம்பவத்தை சுட்டிக்காட்டி அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறையுடன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த காட்டுப் பன்றிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அவை விளைநிலங்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் சேதப்படுத்துவதைத் தடுக்கவும் வனத்துறை உடனடியாகக் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அச்சத்தில் வாழும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: