தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க ரூ.100 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், ஜாமீன் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கட்சி நிதி என்ற பெயரில் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவர், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், "ஆரம்பத்தில் சாதாரண பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் பிரிவு 7 மற்றும் 12 -ன் கீழ் மாற்றப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5-வது நபராக எனது பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டமிட்டு என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தனி நபர்கள் பணம் வசூலித்ததாக மட்டுமே காவல்துறை குற்றம் சாட்டி உள்ளனர். நான் நேரடியாக லஞ்சம் பெற்றதாகவோ? அல்லது சட்ட விரோதமாக பயன்பெறும் வகையில் செயல்பட்டதாகவோ? எந்த ஆதாரத்தையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.
தனியார் பள்ளிகளின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது பள்ளிக் கல்வித்துறை வழக்கமான நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளையே எடுத்தது. இதில் தனிப்பட்ட முறையில் சலுகைகள் எதுவும் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதிகாரத்தை தவறாகவும் பயன்படுத்தவில்லை.
முதாவது (பி.டி அரசகுமார்) மற்றும் 2-ஆவதாக(முத்துக்குமார்) குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தங்களுக்கு என்னிடம் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகங்களிடம் பணம் வசூலித்து உள்ளனர். அவர்கள் என் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக தனிப்பட்ட முறையில் நான் பொறுப்பேற்க முடியாது.
நான் லஞ்சம் பெற்றதாக எந்த ஒரு சாட்சியமும் இல்லை. சாட்சிகளின் வாக்கு மூலத்தின் படி சிலர் என் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்து உள்ளனர் என்பது மட்டுமே தெளிவாகிறது. ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17ஏ-ன் படி, என் மீதான விசாரணைக்கு ஆளுநரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால், அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது சட்டவிரோதமானது.
காவல்துறை விசாரணைக்கு அழைத்த போது நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்து உள்ளேன். நான் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த மனு நாளை மறுநாள் (அக்.29) விசாரணைக்கு வர உள்ளது.

0 கருத்துகள்: