கொடிக் கம்பத்தை கடக்கும் உறுதிமொழியில் கையெழுத்திடாமல் இந்து கோயில்களுக்குள் செல்லும் பிற மதத்தினரை அனுமதிக்காதபடி ஆகம உத்தரவுகளை நிலைநிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டு உள்ளது. மேலும், கையெழுத்து போடாமல் பிற மதத்தினரை அனுமதித்தால் கோயிலின் புனிதம் கெட்டுவிடும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் செல்லும் போது, அதுதொடர்பான விதிமுறைகளை முறையாக அமல்படுத்தக் கோரி மதுரையை சேர்ந்த ரத்னம் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "உரிய விதிமுறைகளின் படியே உறுதிமொழி ஏற்ற பிறகே பிற மதத்தினர் இந்து கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்" எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தமிழக முதல்வர் விஜய் சென்ற போது உரிய விதிமுறைகளை பின்பற்றினார். அதே நேரத்தில், திருச்செந்தூர் கோயிலுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் சென்ற போது விதிகளை முறையாக பின்பற்றவில்லை என செய்திகளில் பார்த்தோம்.
அதேபோல, திருவண்ணாமலை கோயிலில் இஸ்லாமியர் ஒருவர் மத அடையாளத்துடன் சென்றதையும் காண முடிந்தது" எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்து கோயில்களில் பிற மதத்தினர் செல்லும் போதும், வழிபாடு செய்யும் போதும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை முறையாகவும், தீவிரமாகவும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான விரிவான உத்தரவு பிறகு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி விரிவான உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவில், "இந்து கோயில்களுக்குள் செல்லும் போது கொடிக் கம்பத்தை கடக்கும் உறுதிமொழியில் கையெழுத்திடாத பிற மதத்தினரை அனுமதிக்காதபடி ஆகம தடை உத்தரவுகளை நிலை நிறுத்த வேண்டும். இதனை கோயில்களின் அறங்காவலர்கள் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
கையெழுத்து வாங்காமல் பிற மதத்தினர் கோயில்களுக்குள் நுழைந்தால், அது கோயிலின் புனிதத்தை பாதிக்கும். நாங்கள் ஒரு படி மேலே செல்ல உத்தேசித்து உள்ளோம். அதாவது, இந்து கோயில்களின் வளாகத்திற்குள் நுழைவதற்கு கூட, தங்கள் மத அடையாளங்களை வைத்து உள்ள பிற மதத்தினரையும், சம்பந்தப்பட்ட தெய்வத்தின் மீது மரியாதை செலுத்தாதவர்களையும் அனுமதிக்க முடியாது" என தனது உத்தரவில் நீதிபதி கூறி உள்ளார்.

0 கருத்துகள்: