தி.மு.க அலுவலகத்தில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை : நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை துடியலூரில் திமுக சார்பாக அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழர்களின் அடையாளமாகவும், திராவிட இயக்கத்தின் தூணாகவும் விளங்கிய பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15) தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினராலும் பொதுமக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1909-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா, சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமைகள் மற்றும் தமிழ்மொழி உயர்வுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். 1967-இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 'மதராஸ் மாநிலம்' என்பதற்குப் பெருமையுடன் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, கோவை துடியலூர் கிழக்கு பகுதி 2-வது வட்டக் கழக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துடியலூரில் உள்ள தி.மு.க கட்சி அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வட்டக் கழகச் செயலாளர்கள் சண்முகம், சி.டி.சி. ராஜா, தமிழ்நிதி, குமார் (எ) சண்முகம், கழக நிர்வாகிகள் கேப்டன் பிரபாகரன், நிதியரசு, ஆறுச்சாமி, ராமசாமி, சீனிவாசன், சேகரன், வாசு, டி.எஸ். ராமசாமி, டி.என்.சி. பழனிச்சாமி, டி.ஆர். ராஜேந்திரன், ரவி, அயூப்கான், பீடா கடை ராஜன், ஜீவரத்தினம், சிவநந்தினி, தனபாக்கியம், கோமதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டு அண்ணாவின் புகழுக்கு அஞ்சலி செலுத்தினர்.